Friday, 28 March 2014

சேலத்தில் மிக பதட்டமான 1,110 ஓட்டுச்சாவடி துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


சேலம்: சேலத்தில் மொத்தமுள்ள, 6,678 ஓட்டுச்சாவடிகளில், 1,110 ஓட்டுச்சாவடி மிக பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில் மட்டும், 520 மிக பதட்டமான ஓட்டுச்சாவடி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிக்கும், ஒரே கட்டமாக, ஏப்ரல், 24ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த, ஆந்திர மாநில சிறப்பு காவல்படையின், நான்கு கம்பெனிகள், சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.அவர்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, தலா ஒரு கம்பெனி வீதம் அனுப்பப்பட்டு, தேர்தல் பறக்கும் படையுடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தவிர, மேலும், ஐந்து கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளனர்.சேலம் மாவட்டத்தில், 2,257 ஓட்டுச்சாவடிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 1,475, தர்மபுரி மாவட்டத்தில், 1,337, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,609 ஓட்டுச்சாவடிகளும், லோக்சபா தேர்தலுக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சேலத்தில், 520, தர்மபுரியில், 200, நாமக்கல்லில், 196, கிருஷ்ணகிரியில், 194 ஓட்டுச்சாவடி மிக பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.மிக பதட்டமானவையாக கண்டறியப்பட்ட மொத்தம், 1,110 ஓட்டுச்சாவடிகளில், துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு நடந்து வருகிறது. சேலம் மாநகரில், மொத்தம், 727 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், மிக பதட்டமானவையாக, 42 ஓட்டுச்சாவடி கண்டறியப்பட்டு, அங்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. - Thanks Dina Malar

Sample Video

This is Sample Video




Tuesday, 25 March 2014

Pics of the Day








அரசு மருத்துவமனையில் "குடி'மகன்கள் தொல்லை

கெங்கவல்லி: கெங்கவல்லி அரசு மருத்துவமனையில், "குடி'மகன்கள் தொல்லையால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, மருத்துவமனையில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, 30 பெட் வசதிகளும், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது.
தவிர, பொது மருத்துவ சிகிச்சை அளிப்பதால், நாள்தோறும், 350க்கும் மேற்பட்டவர்கள், சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 11.30 மணியளவில், போதையில், பைக்கில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த பழனிவேல், 48, என்பவர், அரை நிர்வாண கோலத்தில், சிகிச்சைக்காக வந்தார்.
அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் மீது விழுந்து, மருத்துவமனை பணியாளர்களிடம் ரகளையில் ஈடுபட்டு, மருத்துவமனையை வலம் வந்ததால், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் அச்சமடைந்தனர்.
பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்து, மருத்துவமனையை விட்டு வெளியேற்றினர். அங்கிருந்து புறப்பட்டு சென்றவர், மீண்டும், 12.30 மணியளவில் மருத்துவமனையில் நுழைந்து, ரகளையில் ஈடுபட்டவர், மாலை, 5 மணி வரை மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை.
அதனால், சிகிச்சை மேற்கொள்ள வந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, 24 மணி நேரம் செயல்படும் வகையில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். - Thanks Dina Malar

மின்சார வசதி இல்லாத 11 கிராமங்கள் பாலமலை பஞ்.,ல் மக்கள் கடும் அவதி

மேட்டூர்: பாலமலை பஞ்.,ல், 22 கிராமங்களில் மின்வசதி இருக்கு நிலையில், 11 கிராமங்களில் இன்னமும் மின்வசதி இல்லாதது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உள்பட்ட, மேட்டூர் சட்டசபை தொகுதி, பாலமலை பஞ்.,ல் 33 கிராமங்கள் உள்ளது. இதில், மின்வாரியம், 22 கிராமங்களுக்கு கம்பம் அமைத்து, மின்இணைப்பு வழங்கியுள்ளது.
ஆனால், பஞ்.ல் மற்றொரு பகுதியில் உள்ள ஈச்சங்காடு, நத்தங்காடு, குங்கிலியங்காடு, தொங்கலம்பாலி, நாகம்பதி, துவரங்காடு, கொள்ளுக்காடு, காரப்பாலிக்காடு, அணைக்காடு, திம்மம்பதி, பெரியகுளம் ஆகிய, 11 கிராமங்களுக்கு இன்னமும் மின்வசதி வழங்கப்படவில்லை. பெரியகுளம் ஓட்டுசாவடிக்கும் மின்வசதி கிடையாது.
தற்போது அடிவாரத்தில் இருந்து பாலமலைக்கு ரோடு போடப்பட்டுள்ளது. ரோடு வழியாக எளிதாக மின்கம்பம் எடுத்து சென்று, நட்டு, 11 கிராமங்களுக்கு மின்வசதி வழங்க முடியும்.
எனவே, தங்கள் கிராமங்களில் மின்வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 11 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 - Thanks Dina Malar