சேலம்: சேலத்தில் மொத்தமுள்ள, 6,678 ஓட்டுச்சாவடிகளில், 1,110 ஓட்டுச்சாவடி மிக பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில் மட்டும், 520 மிக பதட்டமான ஓட்டுச்சாவடி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிக்கும், ஒரே கட்டமாக, ஏப்ரல், 24ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த, ஆந்திர மாநில சிறப்பு காவல்படையின், நான்கு கம்பெனிகள், சேலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.அவர்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, தலா ஒரு கம்பெனி வீதம் அனுப்பப்பட்டு, தேர்தல் பறக்கும் படையுடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தவிர, மேலும், ஐந்து கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளனர்.சேலம் மாவட்டத்தில், 2,257 ஓட்டுச்சாவடிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 1,475, தர்மபுரி மாவட்டத்தில், 1,337, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,609 ஓட்டுச்சாவடிகளும், லோக்சபா தேர்தலுக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சேலத்தில், 520, தர்மபுரியில், 200, நாமக்கல்லில், 196, கிருஷ்ணகிரியில், 194 ஓட்டுச்சாவடி மிக பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.மிக பதட்டமானவையாக கண்டறியப்பட்ட மொத்தம், 1,110 ஓட்டுச்சாவடிகளில், துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள ஏற்பாடு நடந்து வருகிறது. சேலம் மாநகரில், மொத்தம், 727 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், மிக பதட்டமானவையாக, 42 ஓட்டுச்சாவடி கண்டறியப்பட்டு, அங்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. - Thanks Dina Malar